குளச்சல் போர்
குளைச்சல் போர் (Battle of Colachel) என்பது திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மாவுக்கும், டச்சு கிழக்கிந்திய நிறுவனத்திற்கும் இடையே 1739 முதல் 1743 வரை நடைபெற்ற திருவாங்கூர் போரின் ஓர் அங்கமாக இடம்பெற்ற போர் ஆகும். கேரளப் பகுதியில் டச்சுக்காரர்களின் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தப் போரானது மார்த்தாண்ட வர்மாவின் அதிகாரத்தை நிலைநாட்டுவதிலும் முக்கியப் பங்கு ஆற்றியது.

போருக்கான காரணங்கள்
மார்த்தாண்ட வர்மா தனது நாட்டை விரிவாக்கம் செய்வதற்காகப் பல குறுநில அரசுகளை வென்றெடுக்க விரும்பினார். டச்சு நிறுவனத்துடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்த தேசிங்க நாடு நெடுமங்காடு அரசுகள் மீது மார்த்தாண்ட வர்மா போர் தொடுத்ததால் டச்சுக்காரர்களின் வணிகம் கடுமையாகப் பாதிப்புக்குள்ளானது. எனவே 1739 முதல் தேசிங்கநாடு பகுதியில் டச்சுப் படையினர் திருவாங்கூர் படையுடன் மோதி வந்தனர்.

1740 ஆகஸ்டு மாதத்தில் மார்த்தாண்ட வர்மா குளச்சல் பகுதியில் வணிகம் செய்வதற்குப் பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனத்திற்கு அனுமதி அளித்திருந்தார். தென் பகுதியில் தனக்குப் போட்டியாக பிரெஞ்சுக்காரர்கள் வருவதை விரும்பாத டச்சுக்காரர்கள் உடனடியாக குளச்சல் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டனர்.

முதல் தாக்குதல்
1740 ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று குளச்சல் கடல் பகுதியை முற்றுகையிட்ட டச்சுக் கப்பல்களிலிருந்து கடற்கரையை நோக்கிக் கடுமையான பீரங்கித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இரண்டு நாள்களுக்குத் தாக்குதல் நீடித்தது. உள்ளூர் மக்கள் ஊரைவிட்டு வெளியேறினர். வட கிழக்குப் பருவக்காற்று கடுமையாக வீசிக் கொண்டிருந்ததால் டச்சுப் படையினரால் கப்பலிலிருந்து கரையிறங்கி ஊருக்குள் வர இயலவில்லை.
குளச்சலில் முகாமிட்டவாறு கோட்டாறு மற்றும் இரணியலில் செயல்பட்டு வந்த நெசவுக் கூடங்கள் மற்றும் மலைப்பகுதிகளில் அமைந்திருந்த மிளகுத் தோட்டங்கள் அனைத்தையும் அழித்துத் திருவிதாங்கூருக்குப் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதே டச்சு நிறுவனத்தின் நோக்கமாக இருந்தது.

குளச்சல் கோட்டை
டச்சுப் படையின் கொச்சி தலைமைத் தளபதி ஸ்டைன் வான் கொலேனேஸ் தலைமையில் கொல்லத்திலிருந்த டச்சுக் கப்பல்கள் பிப்ரவரி மாதம் குளச்சலை வந்தடைந்தன. 1741 பிப்ரவரி 19 அன்று அதிகாலை குளச்சலில் கரையிறங்கிய டச்சுப் படையினருக்கும் திருவாங்கூர் படையினருக்குமிடையே நடைபெற்ற மோதலில் டச்சுத் தரப்பில் 22 பேர் கொல்லப்பட்டனர். பெருமளவுக்கு உயிரிழப்பைச் சந்தித்த திருவாங்கூர் படை குளச்சலிலிருந்து பின்வாங்கியது. குளச்சலில் முகாமிட்ட டச்சுப் படையினர் கடற்கரையில் செங்கல் மற்றும் களிமண்ணைக் கொண்டு கோட்டை ஒன்றைக் கட்டி எழுப்பினர்.

1741 மார்ச் 26 ஆம் தேதி அன்று டச்சுப் படை கடல் மார்க்கமாகச் சென்று தேங்காய்ப்பட்டணத்தின் மீது கடுமையான குண்டு வீச்சினை நடத்தியது. அங்கே கரையிறங்கிய டச்சுப் படை நெசவுக் கூடங்களையும், வீடுகளையும் தீக்கிரையாக்கியது. டச்சுப் படையினரிடம் பிடிபட்ட உள்ளூர் இளைஞர்கள் டச்சுக் கப்பல்களில் அடிமைகளாக விற்கப்பட்டனர்.

குளச்சலில் டச்சுப் படையினர் தங்களை வலுவாக நிலைநிறுத்திக்கொண்டதால், ஸ்டைன் வான் கொலேனேஸ் மற்றும் கேப்டன் ஹாக்கர்ட் ஆகியோரது தலைமையிலான இரண்டு படைப் பிரிவினர் குளச்சலிலிருந்து திரும்பிச் சென்றுவிட்டனர். யோகான் கிறிஸ்டியான் ரிஜிட்டல் தலைமையிலான 300 வீரர்களை உள்ளடக்கிய படைப்பிரிவினர் மட்டுமே குளச்சலில் எஞ்சியிருந்தனர்.

திருவிதாங்கூரின் தாக்குதல்
திருவிதாங்கூரின் இரண்டாவது இளவரசர் ராமவர்மா தலைமையிலான உள்நாட்டுப் படையினர் போரின் துவக்கத்தில் எதிர்த் தாக்குதலை நடத்தி வந்தனர். டச்சுப் படையை எதிர்கொள்ள டச்சு மற்றும் ஆங்கிலேயப் படையிலிருந்து விலகி வந்த ஐரோப்பிய வீரர்கள் பலரை மார்த்தாண்டவர்மா தனது படையில் இணைத்துக்கொண்டார். கார்ல் அகஸ்ட் டியுவன்சாட் என்ற ஜெர்மானியர் தலைமையிலான 24 ஐரோப்பிய வீரர்கள் உள்ளூர் படையினருக்குப் பயிற்சி அளித்ததுடன், குளச்சல் முற்றுகையை வழிநடத்தியும் வந்தனர். டச்சுக்காரர்களுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவதற்காக ஆங்கிலேயர்கள் மார்த்தாண்ட வர்மாவுக்கு மூன்று கப்பல்களில் வெடி மருந்து, துப்பாக்கி, பீரங்கி போன்ற ஆயுதங்களை அனுப்பி வைத்தனர்.

சூன் மாதத் துவக்கத்திலிருந்து திருவாங்கூர் படை தீவிரமான தாக்குதலைத் தொடுத்துக் குளச்சலை நோக்கி முன்னேறிச் சென்றது. கண்காணிப்புக் கோபுரங்கள் மற்றும் பீரங்கிகளைத் தாங்குவதற்கான கொத்தளங்கள் அமைத்தும், கடற்கரையில் கண்ணி வெடிகளைப் புதைத்தும் திருவாங்கூர் முற்றிலும் ஐரோப்பியப் பாணியிலேயே தாக்குதலை நடத்திவந்தது.

டச்சுப்படையின் தோல்வி
திருவாங்கூர் படை குளச்சல் கோட்டையை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த சமயத்தில் டச்சுப் படையினர் கூடுதல் படை உதவி கேட்டு பிற டச்சு முகாம்களுக்குத் தூதுவர்களை அனுப்பியிருந்தனர்.

கன்னியாகுமரியிலிருந்த ஹாக்கர்ட் தலைமையிலான படைப் பிரிவினரால் குளச்சலுக்கு வந்துசேர இயலவில்லை. 1741 ஆகஸ்ட் 2 அன்று தளபதி யோகான் கிறிஸ்டியான் ரிஜிட்டல் தலையில் குண்டடிபட்டு இறந்து போனார். அதனைத் தொடர்ந்து 31 டச்சுப் படை வீரர்கள் சரணடைந்தனர். ஆனாலும் துணைத் தளபதிகள் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வந்தனர்.

1741 ஆகஸ்டு 9 அன்று கோட்டைக்குள் இருந்த வெடிமருந்து கிடங்கு வெடித்துச் சிதறியதால் எஞ்சியிருந்த அனைத்து வீரர்களும் சரணடைய முடிவு செய்தனர். 1741 ஆகஸ்ட் 12 அன்று நூற்றுக்கும் மேற்பட்ட டச்சுப் படை வீரர்கள் மார்த்தாண்ட வர்மாவின் முன்பாக சரணடைந்தனர். அதன் பின்னர் குளச்சல் கோட்டை அழிக்கப்பட்டது. குளச்சல் தோல்விக்கு கேப்டன் ஹாக்கர்ட்டின் பொறுப்பின்மையே காரணம் என்று முடிவு செய்த டச்சுக் கம்பெனியின் கொச்சி தலைமையகம் ஹாக்கர்ட்டை இந்தோனேசியாவிற்கு நாடு கடத்தி அவரை தனிமைச் சிறையில் அடைத்து வைத்தது.

போரின் விளைவுகள்
குளச்சல் போரில் ஏற்பட்ட தோல்வியால் கேரள பகுதிகளில் டச்சுக்காரர்களின் ஆதிக்கம் சரியத் தொடங்கியது. திருவிதான்கூருடன் சமாதானமாக போக விரும்பிய டச்சுக் கம்பெனி 1743 மற்றும் 1753 ஆம் ஆண்டுகளில் திருவாங்கூர் மன்னருடன் வணிக உடன்படிக்கைகளைச் செய்துகொண்டது. குளச்சல் போரின் வெற்றியால் மார்த்தாண்ட வர்மாவின் செல்வாக்கு அதிகரித்ததுடன் தென் கேரளத்தில் அவர் வலிமையான மன்னராக உருவெடுப்பதற்கும் இந்த வெற்றி வழிவகுத்தது.

குளச்சல் போரின்போது திருவாங்கூர் படையில் சேர்க்கப்பட்ட ஐரோப்பிய வீரர்களின் திறமையால் திருவாங்கூர் படை நவீனப்படுத்தப்பட்டு, பல குறுநில அரசுகளும் வீழ்த்தப்பட்டன. கன்னியாகுமரி டச்சு முகாமிலிருந்து விலகி திருவாங்கூர் படையில் இணைந்துகொண்ட யுஸ்டாச் டி லெனாய் என்ற ஐரோப்பிய வீரர் மார்த்தாண்ட வர்மாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாகி, திருவாங்கூரின் படைத் தளபதியாக பணியாற்றி பல போர் வெற்றிகளுக்கு காரணமாக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வெற்றிச் சின்னம்
குளச்சல் போரின் வெற்றியை நினைவுகூரும் வண்ணம் குளச்சல் கடற்கரையில் திருவாங்கூர் அரசால் 1941 ஆம் ஆண்டு நினைவுத் தூண் ஒன்று எழுப்பப்பட்டிருக்கிறது. குளச்சல் போரின் இருநூறாவது ஆண்டு நினைவைக் கொண்டாடும் விதமாக இந்தத் தூண் எழுப்பப்பட்டிருக்கிறது. 1741 ஆம் ஆண்டு சூலை 31 ஆம் தேதி போர் முடிவடைந்ததாக இந்த தூணில் கல்வெட்டு பதிக்கப்பட்டிருக்கிறது.

இந்த தேதியானது 1906ஆம் ஆண்டு வெளிவந்த வி. நாகம் ஐயாவின் ‘திருவாங்கூர் ஸ்டேட் மானுவல்’ புத்தகத்தில் கூறப்பட்டிருக்கும் தேதியாகும். ஆனால் திருவான்கூரின் பிற வரலாற்றாசிரியர்களான சங்குண்ணி மேனன் மற்றும் டி.கே. வேலுபிள்ளை ஆகியோர் ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில் தான் போர் முடிவடைந்ததாக குறிப்பிடுகின்றனர். டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் ஆவணங்களில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி அன்றே போர் முடிவடைந்ததாக கூறப்பட்டிருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.