டச்சுப்படையைத் திருவிதாங்கூர் ராணுவம் வெற்றி பெற்றதன் நினைவாகக் குளச்சல் கடற்கரையில் மார்த்தாண்டவர்மா மகாராஜாவால் வெற்றித்தூண் ஒன்று நிறுவப்பட்டது. 15 அடி உயரத்தில் ஒரே கல்லில் அமைக்கப்பட்ட வெற்றித்தூணின் முகட்டில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் முத்திரையான சங்கு செதுக்கப்பட்டுள்ளது.
வெற்றித்தூணின் அடிப்பாகத்தில் திருவிதாங்கூர் சமஸ்தான படை டச்சுப்படையை 1741 ம் ஆண்டு ஜூலை 31 ம் நாள் வெற்றிகொண்டதன் நினைவாக நிறுவப்பட்ட வெற்றித்தூண் என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2004 ம் ஆண்டு டிசம்பர் 26 ம் தேதி ஏற்பட்ட சுனாமியிலும் இந்த வெற்றித்தூணுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்பதுதான் ஆச்சர்யம்.
இந்த வெற்றித்தூணுக்கு அரசியல் கட்சியினரும், சமூக இயக்கங்களும் ஆண்டுதோறும் ஜூலை 31 ம் தேதி வீரவணக்கம் செலுத்துவது மரபு. 2009 ம் ஆண்டு முதல் அப்போதைய திருவிதாங்கூர் மன்னர் உத்திராடம் திருநாள் மகாராஜா மற்றும் பாங்கோடு மிலிட்டரி கேம்பைச் சேர்ந்த 16 ம் மெட்ராஸ் ராணுவத்தினர் வெற்றித்தூணுக்கு 24 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தினர்.
அதன்பிறகு ஆண்டுதோறும் வெற்றித்தூணுக்கு ராணுவ மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. 2014 ம் ஆண்டு குளச்சல் நகராட்சி சார்பில் வெற்றித்தூணைச் சுற்றி காம்பவுண்ட் அமைக்கப்பட்டு குளச்சல் போர் வரலாற்றை விளக்கும் புடைப்புச் சிற்பங்கள் அமைக்கப்பட்டன. புடைப்புச் சிற்பத்தில் டச்சுப்படையினர் போர்தொடுத்து வருவதும், மார்த்தாண்டவர்மா மகாராஜாவிடம் டிலனாய் சரணடையும் நிகழ்ச்சியும் தத்ரூபமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆங்கிலேய ராணுவத்தைச் சாமர்த்தியமாகச் சரணடைய வைத்த போர் நிகழ்வு கேரளப் பாடப்புத்தகத்தில் `குளச்சல் யுத்தம்' என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ளது. இதுபோன்று தமிழகப் பாடத்திட்டத்தில் குமரி மண்ணின் பெருமை இடம்பெறவேண்டும் என்பது மாவட்ட மக்களின் கோரிக்கையாக உள்ளது.
0 Comments