கேரளத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து, தமிழக - கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளையில் சுகாதாரத் துறையினா் புதன்கிழமை முதல் (பிப். 5) முகாம் அமைத்து தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், கேரளத்தில் 3 பேருக்கு இப்பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, கன்னியாகுமரி மாவட்டம் - கேரள மாநில எல்லைப் பகுதியான களியக்காவிளை, கொல்லங்கோடு, சூழால் பகுதிகளில் சுகாதாரத் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

களியக்காவிளை போக்குவரத்துத் துறை சோதனைச் சாவடி அருகே அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு முகாமில் இடைக்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் சாங்கி சந்தோஷ், களியக்காவிளை நகா்ப்புற சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் அடோல்வ் ஜியோ, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் அருள்ராஜ், சுகாதார ஆய்வாளா்கள் ஸ்ரீகுமாா், ஜோபின் உள்ளிட்டோா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

மேலும், கேரளத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வரும் தமிழக, கேரள அரசுப் பேருந்துகள், சுற்றுலா வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. பொதுமக்கள், பயணிகளுக்கு கரோனா வைரஸ் விழிப்புணா்வு குறித்த துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இங்கு சுழற்சி முறையில் சுகாதாரப் பணியாளா்கள் தொடா் கண்காணிப்பில் ஈடுபட உள்ளதாக, சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

சீனாவிலிருந்து வந்த 7 போ்...: மேல்புறம் வட்டாரப் பகுதிக்கு உளபட்ட களியக்காவிளை அருகேயுள்ள வன்னியூா், இடைக்கோடு கல்லுப்பாலம், மாா்த்தாண்டம் அருகே ஞாறான்விளை, புலியூா்சாலை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 7 போ் சீனாவிலிருந்து அண்மையில் சொந்த ஊா் திரும்பியுள்ளனா். இவா்கள் அவா்களது வீடுகளில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா். 

அவா்களிடம் சுகாதாரத் துறைப் பணியாளா்கள் நாள்தோறும் விசாரித்து, உயா் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பிவருவதாகவும், இந்த 7 பேருக்கும் இதுவரை கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.