குளச்சல் சாஸ்தான் கரை பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகம் உள்ளது. இதில் அதே பகுதியை சேர்ந்த சுனில் (வயது 42) என்பவர் திருமணம் மற்றும் திருவிழா போன்ற நிகழ்ச்சிக்கு டெக்கரேஷன் அமைத்து கொடுக்கும் கடை நடத்தி வருகிறார்.
இந்த வணிக வளாகத்தில் மளிகைக்கடை, தையல் கடை மற்றும் பழைய இரும்பு கடை ஆகியவை உள்ளன. சுனில் கடையில் டெக்கரேஷன் பொருட்களை வைத்திருந்தார்.

நேற்று மாலை இந்த கட்டிடத்தின் பின்னால் குப்பைகள் திடீரென்று தீபிடித்து எரிந்தது. இதில் அருகில் உள்ள தென்னை மரங்களிலும் தீ பரவி எரிய தொடங்கின. அருகில் உள்ள மரங்களிலும் தீ பற்றியது. தீ வணிக வளாகத்தின் மாடியில் பரவி, அங்கு வைத்திருந்த டெக்கரேஷன் பொருட்களிலும் பற்றி கொண்டது.

இதனால் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இதுகுறித்து சுனில் குளச்சல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு நிலைய அலுவலர் தேவராஜ் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

இதற்கிடையே தக்கலை தீயணைப்பு வாகனமும் வரவழைக்கப்பட்டது. 2 நிலைய தீயணைப்பு வீரர்களும் சுமார் ஒரு மணிநேரம் போராடி தீயை கட்டுபடுத்தி அணைத்தனர்.

இதனால் மற்ற இடங்களுக்கு தீ பரவாமல் பெரும் விபத்து தடுக்கப்பட்டது.