குமரி மாவட்டத்தில் கடலோர சுற்றுலாதலமான சங்குத்துறை பகுதிகளில் மணல் அரிப்பு தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. பொதுவாக ஜூன், ஜூலை மாதங்களில் கடல் அலைகளின் சீற்றம் அதிகமாக காணப்படும். அப்போது இந்த பகுதிகள் கடல் அரிப்பால் பாதிக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில் தற்போது முன்கூட்டியே இந்த பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சங்குத்துறை பகுதிகள் மணல் அரிக்கப்பட்டு சாலை பகுதி வரை கடலுக்குள் இடித்து விழுந்து காணப்படுகிறது. இதன் பாதிப்பு புத்தன்துறை வரை ஏற்பட்டுள்ளது.
இதனால் இந்த பகுதியில் வீடுகளில் வசிக்கின்ற மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை தொடர்ந்து கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆஸ்டின் எம்.எல்.ஏ. இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டார்.

பின்னர் அவர் கூறும்போது:- சங்குத்துறையில் இருந்து புத்தன்துறை வரை கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. புத்தன்துறையில் மீனவர்கள் தொழில் செய்யும் இடம் முழுவதும் பாதிக்கப்பட்டு உள்ளது. நேற்று மாலை முதல் கடல் அரிப்பு தீவிரமாக காணப்படுகிறது. தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டால், இந்த பகுதியில் ஊருக்குள் தண்ணீர் புகுந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இன்னும் இரண்டு, மூன்று நாட்கள் தொடர்ந்தால் வீடுகளுக்கு தண்ணீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தும். சங்குத்துறை பாதிப்பு தொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து ஏற்கனவே எஸ்டிமேட் எடுத்தார்கள். இருப்பினும் ஒன்றரை மாதமாக பணிகள் நடக்கவில்லை.

தொடர்ந்து பாதிப்பு ஏற்படுவதால் இங்கு நிரந்தரமாக கல்போட்டால் கடலில் வள்ளம் இறக்க முடியாது. எனவே தற்காலிகமாக கல் போட்டு பின்னர், தூண்டில் வளைவு அமைத்தால், இந்த பகுதி மீனவர்கள் தொழில் செய்ய இயலும். தமிழகத்தில் மெரினாவுக்கு பிறகு சங்குத்துறை நீளம் அதிகம் கொண்ட கடற்கரையாகும்.

தற்போது அதற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தற்காலிக நடவடிக்கையாகவும், பின்னர் நிரந்தர நடவடிக்கையாகவும் நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.