இந்த செய்தி தொகுப்பு 2016-ம் ஆண்டு வெளியானது. மீண்டும் ஒரு பார்வைக்காக... நாட்டின் கடைக்கோடியில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் பகுதியில் பண்டைய காலத்தில் சிறிய அளவில் மீன் பிடித் துறைமுகம் இயங்கி வந்தது. புராதான துறைமுகமான இதனை, கப்பலில் உலகை சுற்றி வந்த வாஸ்கோடகாமா கொளச்சி என அழைத்தார்.
திருவாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்த, குமரி மாவட்டம், தமிழகத்துடன் இணைக்கப்பட்ட நிலையில், இதனை விரிவுப்படுத்தி, சர்வதேச துறைமுகமாக கட்டமைக்க வேண்டும் என்பது, தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை.
இதற்கு மத்திய அரசு சம்மதம் தெரிவிக்க, ஸ்பெயின் நாட்டை சேர்ந்த நிறுவனம் ஒன்று குளச்சலில் ஆய்வு மேற்கொண்டது. ஆனால், குளச்சலில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இனயம் கிராமத்தில் துறைமுகத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என, ஸ்பெயின் நிறுவனம் ஆலோசனை வழங்கியது.
இதனை அடுத்து, இனயத்தில் 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் துறைமுகம் அமைக்க மத்திய அரசு இசைவு தெரிவித்துள்ளது. மூன்று கட்டங்களாக துறைமுக கட்டுமான பணிகள் நடைபெறவுள்ளது.
முதல் கட்டப் பணியில் 2,500 கோடி ரூபாய் அளவுக்கு தனியாரின் முதலீடு இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடல் பகுதியில் 500 ஏக்கர் அளவுக்கு துறைமுகம் உருவாக்கப்படவுள்ளது.
ஆரம்ப காலத்தில் 20 லட்சம் டன் வரையிலும், எதிர்காலத்தில் 80 லட்சம் டன் அளவு வரை இத்துறைமுகத்தில் சரக்குகள் கையாள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சரக்குப் பெட்டகம் மற்றும் சரக்குப் போக்குவரத்தின் நுழைவு வாயிலாக குளச்சல் துறைமுகம் திகழும். சர்வதேச கப்பல் போக்குவரத்தில் அரபிக்கடல் நாடுகளையும், வங்கக்கடல் நாடுகளையும் ஒருங்கிணைக்க முடியும் என வல்லுனர்கள் கூறுகின்றனர். தென் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
தமிழகம் மட்டுமின்றி, ஒட்டு மொத்த இந்தியாவின் கடல் வாணிபம் மேம்பட்டு, பொருளாதார வளர்ச்சிக்கு குளச்சல் துறைமுகம் வித்திடும். இது ஒருபுறமிருக்க, இனயத்தில் சர்வதேச துறைமுகம் அமைக்க, உள்ளுர் மற்றும் சுற்றுப்புற பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பான போராட்டங்களும் நடந்து கொண்டுதான் வருகின்றன. எனினும் மத்திய அரசும், தமிழக அரசும் துறைமுகத்தை உருவாக்குவதில் முனைப்பு காட்டி வருகின்றன. குளச்சலில் துறைமுகம் அமைந்தால், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் 4 பெரிய துறைமுகங்கள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தி தொகுப்பு 2016-ம் ஆண்டு வெளியானது. மீண்டும் ஒரு பார்வைக்காக...
0 Comments