குளச்சல் போரின் வெற்றியை நினைவுகூரும் வண்ணம் குளச்சல் கடற்கரையில் திருவாங்கூர் அரசால் 1941 ஆம் ஆண்டு நினைவுத் தூண் ஒன்று எழுப்பப்பட்டிருக்கிறது. குளச்சல் போரின் இருநூறாவது ஆண்டு நினைவைக் கொண்டாடும் விதமாக இந்தத் தூண் எழுப்பப்பட்டிருக்கிறது. 1741 ஆம் ஆண்டு சூலை 31 ஆம் தேதி போர் முடிவடைந்ததாக இந்த தூணில் கல்வெட்டு பதிக்கப்பட்டிருக்கிறது.
இந்த தேதியானது 1906ஆம் ஆண்டு வெளிவந்த வி. நாகம் ஐயாவின் ‘திருவாங்கூர் ஸ்டேட் மானுவல்’ புத்தகத்தில் கூறப்பட்டிருக்கும் தேதியாகும். ஆனால் திருவான்கூரின் பிற வரலாற்றாசிரியர்களான சங்குண்ணி மேனன் மற்றும் டி.கே. வேலுபிள்ளை ஆகியோர் ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில் தான் போர் முடிவடைந்ததாக குறிப்பிடுகின்றனர். டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் ஆவணங்களில் ஆகத்து 12 ஆம் தேதி அன்றே போர் முடிவடைந்ததாக கூறப்பட்டிருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.