கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு மணிமண்டபம் விரைவில் அமைக்கப்படும் என தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது:-
தமிழகத்தில் ஆண்டுதோறும் 1600 மாணவர்கள் மருத்துவக் கல்வி கற்கும் வகையில் இந்த ஆட்சி காலத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு வரலாற்று சாதனையாகும். சேலம் மாவட்டத்தில் ரூ.1,000 ஆயிரம் கோடி செலவில் கால்நடை பூங்கா அமைக்கப்பட உள்ளது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் கால்நடை அபிவிருத்தி செய்யும் வகையிலும், கால்நடை மருத்துவப் படிப்பு மற்றும் கால்நடை ஆராய்ச்சி படிப்புகளை படிக்கும் வகையிலும் இப்பூங்கா, கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் அமைக்கப்பட உள்ளது.
குமரி மாவட்டம் தோவாளையில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு விரைவில் மணிமண்டபம் அமைக்கப்படும் கன்னியாகுமரியிலுள்ள காந்தி மண்டபம் மற்றும் காமராஜர் மணிமண்டபம் ஆகியவை ரூ. 53 லட்சம் செலவில் புனரமைக்கப்படும்.
பத்திரிக்கையாளர் நல வாரியம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் அறிவித்துள்ளார். அதற்காக குழு அமைக்கப்பட்டு பூர்வாங்கப் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. நலவாரியம் அமைப்பது தொடர்பாக முழுவீச்சில் இக்குழு செயல்பட்டு வருகிறது. அதன் அறிக்கை வந்தவுடன் நல வாரியம் அமைக்கப்படும்.
0 Comments